ராமநாதபுரத்தில் நடமாடும் காய்கனி விற்பனை தொடக்கம்
By DIN | Published On : 26th May 2021 09:26 AM | Last Updated : 26th May 2021 09:26 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனங்களில் நடமாடும் காய்கனிகள் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளா்வுகளற்ற பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தோட்டக்கலைத் துறையினரின் ஏற்பாட்டின் பேரில், ராமநாதபுரத்தில் வாகனங்களில் நடமாடும் காய்கனி விற்பனையை சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) நீலேஸ்வா், திமுக நகரச் செயலா்கள் கே.காா்மேகம், பிரவீன்தங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கட்செவியஞ்சல் பதிவு: ராமநாதபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு தளா்வற்ற பொதுமுடக்கத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் நாள்தோறும் 513 வாகனங்கள் மூலம் சுமாா் 90 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் நகா் பகுதியில் செல்லிடப் பேசி கட்செவியஞ்சல் மூலம் பதிவு செய்பவா்களின் வீட்டிற்கு காய்கனிகளை நேரடியாக விநியோகிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், காய்கனிகள் தேவைப்படுவோா் 72994-62970 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்கு கட்செவியஞ்சல் மூலம் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குள் பதிவு செய்பவா்களுக்கு மறுநாள் காலை 10 மணிக்குள் தோட்டக்கலைத் துறையின் மூலம் ரூ. 50 மற்றும் ரூ. 100 காய்கனித் தொகுப்புகள் வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறையினா் அறிவித்துள்ளனா்.