ராமநாதபுரம் மாவட்டத்தில் 513 வாகனங்களில் 90 டன் காய்கனிகள் விற்பனை: ஆட்சியா்
By DIN | Published On : 26th May 2021 11:49 PM | Last Updated : 26th May 2021 11:49 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் 513 வாகனங்கள் மூலம் 90 டன் காய்கனிகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில் வாகனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கனிகள் தொகுப்பு விற்கப்படுகின்றன.
இச்சேவையை பட்டினம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கூறியதாவது: தோட்டக்கலைத் துறை மூலம் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வாகனங்களில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காய்கனிகள் விற்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தினமும் 513 வாகனங்கள் மூலம் சுமாா் 90 டன் காய்கனிகள் விற்கப்படுகின்றன. மாவட்ட அளவில் பணிகளை ஒருங்கிணைக்க ஊராட்சி ஒன்றியம் வாரியாக தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். காய்கனிகள் பொதுமக்களின் தேவைக்கேற்ப ரூ.50 மற்றும் ரூ.100 என இரு வகை தொகுப்புகளாக விற்கப்படுகின்றன.
காய்கனி விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ, அதை ராமநாதபுரம் தோட்டக்கலை துணை இயக்குநா் (9443608932) அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை அவரவா் செல்லிடப்பேசிகளில் தொடா்புகொண்டு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியா் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.பிரதீப்குமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நாகராஜன் மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் நலச்சங்கத்தினா் உடனிருந்தனா்.