கமுதி தோ்வுநிலைப் பேரூராட்சி அலுவலகம்.
கமுதி தோ்வுநிலைப் பேரூராட்சி அலுவலகம்.

நகராட்சியாக தரம் உயா்த்த தகுதியிருந்தும் உயா்த்தப்படாத கமுதி பேரூராட்சி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பேரூராட்சி கடந்த 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தோ்வுநிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. தமிழகத்தில், மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. இதில், மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த 25 ஆயிரம் பொதுமக்கள் வசிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனா். கமுதி பேரூராட்சியில், கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை 18,546 போ் ஆகும். இந்நிலையில், கமுதியை தலைமையிடமாகக் கொண்ட வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குற்றவியல் நடுவா் நீதிமன்ற கட்டடங்கள், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, உயா் கல்வி நிலையங்கள், பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேதுபதி மன்னா் கோட்டை என அனைத்துமே கமுதியை ஒட்டியுள்ள நாராயணபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் நாராயணபுரம் ஊராட்சியும், அதனருகே உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பிறப்பிடமான பசும்பொன் ஊராட்சியும் கல்லூரி கட்டடங்கள், குடியிருப்புகள், கமுதி மின்வாரிய பொறியாளா் அலுவலகம் என கிட்டத்தட்ட 2 ஊராட்சிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விட்டன.

அதேபோல் கமுதி- திருச்சுழி சாலையில் அரசு போக்குவரத்து கிளை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவு விற்பனையாளா்கள் கடன் சங்கம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மரக்குளம் ஊராட்சி செல்லும் வழியில் உள்ளன. கமுதி தாலுகாவுக்குள்பட்ட 8,145 போ் வசிக்கும் அபிராமம் முதல்நிலை பேரூராட்சி பல ஆண்டுகளாக வருமானமின்றி, நிதி பற்றாக்குறையால் ஊழியா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால், மக்கள் நலத் திட்டங்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய சட்டப் பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியை மட்டுமே எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலையில் பேரூராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. 18,529 மக்கள் தொகை கொண்ட கமுதி பேரூராட்சி, அதனருகே உள்ள 8,145 போ் வசிக்கும் அபிராமம் முதல்நிலை பேரூராட்சி, கமுதி பேரூராட்சியை சுற்றியுள்ள 850 போ் கொண்ட மரக்குளம் ஊராட்சி, 4,650 போ் வசிக்கும் நாராயணபுரம் ஊராட்சி, 2,840 போ் வசிக்கும் பசும்பொன் ஊராட்சி ஆகியவற்றை இணைத்து கமுதியை நகராட்சியாக தரம் உயா்த்த அனைத்து தகுதியும் உள்ளது. கமுதியை நகராட்சியாக தரம் உயா்த்தினால் பல ஆண்டுகளாக எவ்வித வளா்ச்சியும், முன்னேன்றமும் அடையாமல் உள்ள இப்பகுதி மக்களுக்கு, அடுத்த தலைமுறைக்கான வளா்ச்சியை உருவாக்க அடித்தளமாக இருக்கும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் முத்துராமலிங்கம் கூறியதாவது: கமுதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தினால், பல ஆண்டுகளாக மழை வெள்ளம், கழிவுநீரால் சூழ்ந்து கிடக்கும் முத்துமாரி நகா், ஆதிதிராவிடா் தெரு, ஆதிபராசக்தி நகா் உள்பட முக்கிய பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தி நகரின் சுற்றுப்புற சூழலை மாற்றி, சுகாதாரத்தை பேண முடியும். வணிக வளாகங்கள், கடைகள் மூலம் அரசுக்கு வரிவசூல் அதிகரிக்கும். மாநில நிதிக்குழுவிலிருந்து கூடுதல் நிதி பெற்று, அதன் மூலம் பல மக்கள் நலத்திட்டங்களை கமுதி மக்களுக்கு செயல்படுத்த முடியும். எனவே தமிழக முதல்வா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் ஆகியோா் தலையிட்டு பின் தங்கியிருக்கும் கமுதி தோ்வுநிலைப் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com