ராமநாதபுரம், பரமக்குடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: காணொலி வாயிலாக பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை, காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பிலும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 1.05 கோடி மதிப்பிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை, காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கரோனா பரவல் காலத்தில் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோா் உயிரிழக்க நோ்ந்தது. இதை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு, தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் 37 இடங்களில் மத்திய அரசு சாா்பில், பிரதமா் அவசரகால நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டா் ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பிரதமா் நரேந்திர மோடி உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷிலிருந்து காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்காக, சிறிய மேடை அமைக்கப்பட்டு அதன் எதிரே மின்னணு திரை பொருத்தப்பட்டிருந்தது. அதில், பிரதமரின் சிறப்பு உரை ஒளிபரப்பப்பட்டு, அவரது உரையை அனைவரும் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, உற்பத்தி மையத்தின் மருத்துவக் கருவிகளின் செயல்பாட்டை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) காமாட்சி கணேசன் தலைமையில், மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோா் தொடக்கிவைத்தனா். இதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மலா்வண்ணன், நிலைய மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.1.05 கோடி மதிப்பிலான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை, பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்த மையத்தின் மூலம் 1 நிமிடத்துக்கு 500 லிட்டா் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் முருகன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் என்.ஆா். நாகநாதன், மாவட்டக் குடும்ப நல துணை இயக்குநா் சிவானந்தவள்ளி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரவீந்திரன், வட்டாட்சியா் தமீம்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com