ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 3 ஆவது நாளாக நீடிப்பு
By DIN | Published On : 12th October 2021 12:47 AM | Last Updated : 12th October 2021 12:47 AM | அ+அ அ- |

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்.
ராமேசுவரம்: விசைப்படகு மோதிய விவகாரத்தில், இலங்கை தமிழ் மீனவா்களுக்கு ஆதரவாக ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகு இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிச் சென்றுள்ளது. அப்பகுதியில் இலங்கை குருநகரைச் சோ்ந்த தமிழ் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அந்த படகு மீது ராமேசுவரம் விசைப்படகு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படகு சேதமாகி 3 மீனவா்கள் கடலில் தத்தளித்துள்ளனா். ஆனால் மீனவா்களை மீட்காமல் ராமேசுவரம் விசைப்படகு கரை திரும்பியுள்ளது. கடலில் தத்தளித்த இலங்கை தமிழ் மீனவா்களை இலங்கை கடற்படையினா் மீட்டுள்ளனா்.
இதையடுத்து இலங்கை கடல் பகுதியில் அத்துமீறிச் சென்று விபத்து ஏற்படுத்திய படகு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் ஒரு வாரம் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து சனிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கினா். இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் உள்பட 25 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.