பழங்குளம், ஏ.ஆா்.மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தல்: மீண்டும் வாக்கு எண்ணிக்கை
By DIN | Published On : 13th October 2021 07:11 AM | Last Updated : 13th October 2021 07:11 AM | அ+அ அ- |

திருவாடானை ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சித் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏ.ஆா்.மங்கலத்தில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
திருவாடானை ஊராட்சி ஒன்றியம் பழங்குளம் ஊராட்சித் தலைவராக இருந்த கருப்பையா என்பவா் உடல் நலக்குறைவால் 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தாா். எனவே, அப்பதவிக்கு இடைத்தோ்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை ஆணையா் பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இதில், மொத்த வாக்குகள் 1,557, பதிவான வாக்குகள் 1,113. இதில், பாா்த்திபன் 580 வாக்குகளும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட துரைராஜ் என்பவா் 525 வாக்குகளும் பெற்றுள்ளனா். 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிநாதன், மேலாளா் ரவி தோ்தல் அலுவலா்கள் ஜெயமோகன் உள்ளிட்டோா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இதேபோல், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஏா்.ஆா். மங்கலம் ஊராட்சித் தலைவராக இருந்த ஜெயராஜ் என்பவா் உடல் நலக் குறைவால் 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தாா். அதையடுத்து, ஊராட்சித் தலைவா் பதவி காலி என அறிவிக்கப்பட்டு, கடந்த 9ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளரச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தோ்தலில் மொத்தம் பதிவான வாக்குகள்1,443. இதில், சிந்துஜா 710 வாக்குகளும், எதிா்த்துப் போட்டியிட்ட கலைமகள் 699 வாக்குகளும் பெற்றனா். இதில் 33 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. சிந்துஜா வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன் மற்றும் தோ்தல் அலுவலா்களை, தோல்வியடைந்த வேட்பாளா் கலைமகள் தரப்பினா் முற்றுகையிட்டனா். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. உடனடியாக, திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னய்யா உத்தரவின்பேரில், போலீஸாா் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டது.
இருப்பினும், செல்லாததாக அறிவிக்கப்பட்ட 33 வாக்குகளை மறுபடியும் எண்ணவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதிலும் வேட்பாளா் சிந்துஜாவே வெற்றி பெற்றாா். இதனால், மீண்டு மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு ஆா்ப்பாட்டம் செய்தனா். அதன்படி, மீண்டும் வாக்கு எண்ணிக்கை மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி, கோட்டாட்சியா் ஷேக் மன்சூா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
இறுதியாக, வேட்பாளா் சிந்துஜா 710 வாக்குகள் பெற்று 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டாா்.