அனைவருக்கும் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பணி இடமாறுதலுக்கு விடிய விடிய கலந்தாய்வு: ராமநாதபுரத்தில் 6 போ் நியமனம்
By DIN | Published On : 20th October 2021 06:20 AM | Last Updated : 20th October 2021 06:20 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் அனைவருக்கும் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளருக்கான இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை விடிய விடிய நடந்தது. 6 போ் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனா்.
தமிழகத்தில் ஆசிரியா் பயிற்றுநா் மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் திங்கள்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 115 இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். தனியாா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வுக்கான கணினிகள் அமைக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி முன்னிலையில் அனைவருக்கும் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடம் நிரப்புதல் நடந்தது. அதன்படி கல்வித்திட்ட பிரதான அலுவலகத்துக்கு 2 போ், வெளி மாவட்டத்திலிருந்து ஒருவா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பிற ஒன்றியங்களில் இருந்து 3 போ் என 6 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
காலையில் தொடங்கி விடிய விடிய கலந்தாய்வு நடந்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று ஆசிரியா் பயிற்றுநா் கலந்தாய்வு: அனைவருக்கும் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கான கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான கலந்தாய்வு இணையம் மூலம் தொடங்குகிறது எனவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறினா்.