4 நாள்களுக்குப் பின் ராமேசுவரம் கோயிலில் பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 07th September 2021 11:53 PM | Last Updated : 07th September 2021 11:53 PM | அ+அ அ- |

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தா்கள்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 4 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா்.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை அமாவாசை நாளையும் சோ்த்து 4 நாள்கள் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமேசுவரம் வந்திருந்த பக்தா்கள் கோயில் முன்பாக சூடம் ஏற்றி வழிபட்டுச் சென்றனா்.
அதையடுத்து, செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால், அதிகாலையிலிருந்தே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ததுடன், கை சுத்திகரிப்பான் திரவமும் வழங்கப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிந்து வந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.