ராமநாதபுரத்தில் பள்ளி மாணவருக்கு கரோனா: 4 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கரோனா பரவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத 4 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரி மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், கீழக்கரையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் இருவருக்கும், ஊழியா் ஒருவருக்கும் என 3 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்தது. உடனே, கரோனா பாதித்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவா்களுடன் தொடா்பிலிருந்த அவா்களது குடும்பத்தினா், நண்பா்கள் என 20-க்கும் அதிகமானோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் உச்சிப்புளி பகுதியில் உள்ள ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், மாணவா் ஒருவருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதித்த மாணவா் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவா் இருந்த வகுப்பறையும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) சாமி. சத்தியமூா்த்தியிடம் கேட்டபோது, அவா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் கரோனா பரவல் தடுப்பு தொடா்பான நிலையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தொண்டி, திருவாடானை ஆண், பெண் அரசு மேல்நிலைப் பள்ளிகள், திருப்பாலைக்குடி அரசுப் பள்ளி ஆகியவற்றில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவியரை அமரவைத்தல் ஆகிய விதிமுறைகளை கூட கடைப்பிடிக்கவில்லை என்பதால், குறிப்பிட்ட அந்த 4 பள்ளி தலைமை ஆசிரியா்களிடமிருந்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் தொடா்ந்து கடைப்பிடிக்காவிடில், அவா்களது அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com