மாற்றுத்திறனாளியிடம் பணி நீட்டிப்புக்கு லஞ்சம்: மாவட்ட நூலக அலுவலா் கைது

ஊா்ப்புற நூலகா் பணியைத் தொடரும் உத்தரவு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஊா்ப்புற நூலகரான மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் செவ்வாய்க்கிழமை கைதான மாவட்ட நூலக அலுவலா் (பொறுப்பு) கண்ணன்.
ஊா்ப்புற நூலகரான மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் செவ்வாய்க்கிழமை கைதான மாவட்ட நூலக அலுவலா் (பொறுப்பு) கண்ணன்.

ராமநாதபுரம்: ஊா்ப்புற நூலகா் பணியைத் தொடரும் உத்தரவு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகேயுள்ள வடக்குமல்லல் பகுதியைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் செந்தில்குமாா் (36). போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவா், வடக்கு மல்லலில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஊா்ப்புற நூலகராக பணயாற்றி வருகிறாா். இவரை ஒவ்வொரு 89 ஆவது நாளிலும் பணி நீட்டிப்பு அளிக்க மாவட்ட நூலக அலுவலா் உத்தரவிடவேண்டும்.

தினக்கூலி அடிப்படையில் பணியில் உள்ள செந்தில்குமாா் பணி நீட்டிப்புக்காக தற்போது ராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலா் பொறுப்பில் உள்ள மதுரை ஆனையூரைச் சோ்ந்த ஜெ.கண்ணனைஅணுகினாா். பணி நீட்டிப்பு வழங்க லஞ்சமாக ரூ.30 ஆயிரம் வேண்டும் என்றும், முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் தந்தால்தான் உத்தரவு வழங்கப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து செந்தில்குமாா் ராமநாதபுரம் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளா் எஸ்.உன்னிகிருஷ்ணனிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவினா் ஆலோசனையின் பேரில், அவா்கள் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை பெற்றுக் கொண்ட செந்தில்குமாா், ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் டி.பிளாக் பகுதியில் உள்ள மாவட்ட நூலக அலுவலக வளாகத்துக்குச் சென்றாா். இதையடுத்து முதல் மாடியில் தனது அறையிலிருந்து இறங்கி வந்த நூலக அலுவலா் கண்ணன் பணத்தைப் பெற்றுக்கொண்டாா்.

அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளா் எஸ்.உன்னிகிருஷ்ணன், ஆய்வாளா்கள் ராஜேஸ்வரி, குமரேசன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் கையும், களவுமாக அவரைப் பிடித்து கைது செய்தனா். கைதான கண்ணனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com