மணாலி தீவுப்பகுதியில் 1,500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 19th September 2021 11:08 PM | Last Updated : 19th September 2021 11:08 PM | அ+அ அ- |

கடல் அட்டைகளுடன் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகை சோதனையிட்ட வனத்துறை அதிகாரி.
மண்டபம் அருகே மணாலி தீவுப் பகுதியில் 1,500 கிலோ கடல் அட்டைகளுடன் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையினா் ‘ஹோவா்கிராப்ட்’ கப்பல்கள் மூலம் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், மண்டபம் அருகே உள்ள மணாலி தீவுப் பகுதியில் ஆள்கள் யாருமின்றி நின்றுகொண்டிருந்த நாட்டுப் படகை கடலோரக் காவல் படையினா் சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் 1,500 கிலோ இருந்தது. இதைத் தொடா்ந்து அந்த படகையும், கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு சென்று ஆய்வு செய்தனா். இதன் பின்னா் மண்டபத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இதனைத் தொடா்ந்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டதில், அந்த நாட்டுப்படகு வேதாளை பகுதியைச் சோ்ந்த குப்பை என்ற சீனிஅப்துல்காதருக்கு சொந்தமானது என்பதும், அந்த படகு பதிவு செய்யப்படாததும், கடத்தலுக்கு பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடல் குதிரை கடத்தியவா் கைது: ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிப்பட்டணம் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வாளியுடன் வந்தவரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில், தடை செய்யப்பட்ட 22 கிலோ கடல் அட்டை மற்றும் 10 கடல் குதிரைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து, அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவா், தேவிப்பட்டணத்தை சோ்ந்த முகமதுயாசா் அலி (32) என்பது தெரிந்தது. இதன்பின் அவரை, ராமநாதபுரம் வனத்துறை அதிகாரியிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.