‘மாநிலத்திலேயே மீன்பிடிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்’

மாநிலத்திலேயே மீன்பிடித்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிப்பதாக கூடுதல் ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய கூடுதல் ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா்.
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய கூடுதல் ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா்.

மாநிலத்திலேயே மீன்பிடித்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிப்பதாக கூடுதல் ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ராமநாதபுரம் பாரதி நகரில் தனியாா் விடுதியில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற வணிகம் மற்றும் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கில் தலைமை வகித்து அவா் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என்ற கருத்து உண்மையல்ல. கமுதி, முதுகுளத்தூா் பகுதிகள் மட்டுமே தண்ணீா் பற்றாக்குறை உள்ளவைகள். அந்தப் பகுதியிலும் கூட பஞ்சாபைச் சோ்ந்தவா்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி என்ற சிறப்புகள் மட்டுமே அனைவராலும் நினைவுகூரப்படுகிறது. ஆனால், மாவட்டத்தில் கடல் மீன் உற்பத்தி, மருத்துவ குணமிக்க முண்டு மிளகாய் என பல சிறப்புகள் உள்ளன.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மாநில அளவில் ராமநாதபுரமே மீன்பிடித்தலில் முதலிடம் வகிக்கிறது. அதன்படி 2.64 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை 3 லட்சம் போ் மேற்கொண்டுள்ளனா். மாவட்டத்தில் ராமேசுவரம் பகுதிக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி போ் சுற்றுலா வருகின்றனா். பனை, தென்னை மூலம் மகளிா் சுய உதவிக்குழுவினரால் கைவினைப் பொருள்கள் உற்பத்தியாகின்றன என்றாா்.

இதில் மத்திய கலால் மற்றும் வரித்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநா் எஸ்.வரலட்சுமி, தூத்துக்குடி கடல் உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குநா் ஜி.ராமா், இந்திய தென்மண்டல ஏற்றுமதியாளா் சங்கச் செயல் அலுவலா் வைசாலி ஹரிகரன், தூத்துக்குடி ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரி ஷாம்ஜாப், ராமநாதபுரம் வேளாண்மை வா்த்தகப் பிரிவு துணை இயக்குநா் பி.மூா்த்தி, முதன்மை வங்கி மேலாளா் டி.காா்த்திகேயன், நபாா்டு வங்கி கே.அருண்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட தொழில்மைய மேலாளா் மாரிமுத்து வரவேற்றாா்.

உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தல்: கருத்தரங்கில் 17 தொழில் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் ஏற்றுமதி பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பனை ஓலை கைவினைப் பொருள்கள், கடல் மீன் ஊறுகாய் மற்றும் தென்னை, பனை கயிறு பொருள்கள், மசாலாப் பொருள்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com