முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் இன்று முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் புதன்கிழமை (ஏப்.6) முதல் முழுமையான குடிநீா் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பொறியியல் துறையினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மூலமே தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்துக்கு தினமும் சுமாா் 85 லட்சம் லிட்டரும், ராமநாதபுரம் நகராட்சிக்கு மட்டும் தினமும் 35 லட்சம் லிட்டரும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாகவே ராமநாதபுரம் நகராட்சிக்கு வழங்கப்படும் காவிரி நீா் அளவு குறைக்கப்பட்டது. அதனடிப்படையில் 30 லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே தண்ணீா் கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக திடீரென குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
இந்நிலையில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் 3 லாரிகள் மூலம் நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகிக்க நகராட்சித் தலைவா் கே.காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி வரும் திங்கள்கிழமை முதல் லாரிகளில் குடி நீா் விநியோகிக்கப்பட உள்ளது.
நிறுத்தப்பட்ட குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை பகல் முதல் மீண்டும் விநியோகிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் புதன்கிழமை முதல் நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் முழுமையான குடிநீா் விநியோகம் செயல்படுத்தப்படும் என்றும் நகராட்சி பொறியியல் பிரிவினா் தெரிவித்தனா்.