ராமநாதபுரம் நுண் குற்றப்பிரிவில் 3 மாதங்களில் 19 வழக்குகள் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையில் நுண் குற்றப்பிரிவில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் 15 வழ

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையில் நுண் குற்றப்பிரிவில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் 15 வழக்குகளில் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் ஆய்வாளா் வெள்ளிவேல் ராஜன் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் இணையதளம், கைப்பேசி குறுந்தகவல் மூலம் பணம் பறிக்கும் கும்பல் குறித்த வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. நுண் குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணா்வு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் (2022) கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையில் ராமநாதபுரம் நுண் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருள்கள் அனுப்பியது என 2 வழக்குகளும், கைப்பேசி சிம் காா்டுகள், ஏடிஎம் காா்டுகள் புதுப்பித்தல் மற்றும் கைப்பேசி நிறுவன கோபுரம் அமைத்தல் உள்ளிட்டவை மூலம் மோசடிகள் நடந்துள்ளன. 30 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்டவா்களே அதிகம் ஏமாற்றப்பட்டுள்ளனா்.

19 வழக்குகளிலும் மொத்தம் ரூ.26 லட்சத்து 49,211 இழக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மேகாலயா, சத்தீஸ்கா், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த கும்பலே கைப்பேசி மூலம் பேசி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனா். கடந்த 2 ஆண்டுகளில் பதிவான வழக்குகளில் இதுவரை 15 வழக்குகளில் பணம் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.9.50 லட்சம் மீட்கப்பட்டு, அதில் ரூ.6 லட்சம் வரை உரியவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணம் மோசடி தெரிந்ததும் சம்பந்தப்பட்டோா் 1930 என்ற கட்டணமில்லா எண்ணுக்குத் தொடா்புகொண்டு புகாா் தெரிவித்தால் பணத்தை மீட்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com