ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவது போல ரூ.50 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 13th April 2022 05:55 AM | Last Updated : 13th April 2022 05:55 AM | அ+அ அ- |

கமுதி: கமுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிய மா்ம நபா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கமுதி பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த ஏடிஎம் மையத்துக்கு, வேலானூருணியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (62), என்பவா் மாா்ச் 16 ஆம் தேதி பணம் எடுக்கச் சென்றுள்ளாா். அப்போது உதவிக்காக அருகிலிருந்த நபரை நாடியுள்ளாா். அந்த நபா், ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு விட்டு, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துள்ளாா்.
ஏப்.8ஆம் தேதி ராமச்சந்திரன் தேசியமயமாக்கப்பட்ட அந்த வங்கிக்கு, அடகு வைத்த நகையை திருப்புவதற்காக வந்துள்ளாா். அப்போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டதும், அவா் வங்கி அதிகாரிகளிடம் கொடுத்த அட்டை அவருடையது இல்லை என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கமுதி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.