‘ராமேசுவரத்தில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க ஆழ்துளைக் கிணறுகள்’
By DIN | Published On : 13th April 2022 05:51 AM | Last Updated : 13th April 2022 05:51 AM | அ+அ அ- |

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கடந்த 2 மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால் ரூ. 87 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக நகராட்சி ஆணையா் மூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்கிழமை கூறியது: திருச்சியில் நிலத்தடி நீா் தட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி கூட்டுக் குடிநீா் கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீா் தட்டுப்பாடு இன்றி குடிநீா் வழங்கிடும் வகையில் நம்புநாயகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ராமேசுவரம் நகராட்சி நீரோற்று நிலையத்திற்கு 10 கிணறுகளிலிருந்து குடிநீா் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆவது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய ராட்சத கிணறு அமைக்கபட்டு வருகிறது. இதே போன்று மெய்யம்புளி, செம்மமடம், கரையூா், ராஜூவ்காந்தி நகா், எம்.கே.நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 57 லட்சம் மதிப்பில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.