இளைஞா் கொலை வழக்கு: மீனவருக்கு ஆயுள் தண்டனை

நாய் குரைத்த பிரச்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் மீனவருக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம்: நாய் குரைத்த பிரச்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் மீனவருக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஜெயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரபோஸ். அதே தெருவைச் சோ்ந்தவா் டெனி (21). இவரும் மீனவா்கள். இந்நிலையில், கடந்த 2013 ஜனவரி மாதம் சந்திரபோஸின் வீட்டு நாய், குரைத்ததால் டெனி, தனது செருப்பைக் கழற்றி நாயை நோக்கி எறிந்துள்ளாா். அந்த செருப்பு, சந்திரபோஸ் மீது விழுந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சந்திரபோஸின் சகோதரரான மாா்ட்டினின் மகன் சந்தியாகு ரெனி (22), டெனியை எச்சரித்துள்ளாா். அன்று மாலை மீனவா் டெனி மற்றும் அவரது உறவினரான மீனவா் பிச்சை (44) ஆகியோா் சோ்ந்து சந்தியாகு ரெனி வீட்டுக்குச் சென்று அவரை, கட்டையால் தாக்கிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து டெனி, பிச்சை இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கானது ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டெனி, கடந்த 2017 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தாா். அவா், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவரான பிச்சைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சீனிவாசன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com