ராமேசுவரத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 21 மரத்தோ் சிற்பங்களை மீட்கவேண்டும்

ராமேசுவரத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 21 மரத்தோ் சிற்பங்களை மீட்கவேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினாா்.
ராமேசுவரத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 21 மரத்தோ் சிற்பங்களை மீட்கவேண்டும்

ராமேசுவரத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 21 மரத்தோ் சிற்பங்களை மீட்கவேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலுக்கு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 26 ஆயிரம் கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்கள் வறுமையில் உள்ளனா். அவா்களுக்கு முறையாக ஊதியம் வழங்காவிடில் கோயில் பூஜைகள் நடக்காத நிலை ஏற்படும். அக்கோயில்களில் உள்ள மங்கள வாத்தியக்காரா்கள், சிலை மெய்க்காப்பாளா்கள் உள்ளிட்டோருக்கும் உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில 3.50 லட்சம் உற்சவ விக்கிரகங்கள் பதிவு செய்யப்படாமலே உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 813 விக்கிரகங்களை மத்திய தொல்லியல் சிறப்புக் குழுவின் மூலம் சோதனையிட்டதில் 197 விக்கிரகங்கள் போலி எனத் தெரியவந்தது.

ராமேசுவரத்திலிருந்து தோ் பாகங்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது உடைக்கப்பட்டு அரசு காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்த பாகங்கள் பின்னா் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு ராமேசுவரம் கோயில் தேரிலிருந்த 21 மரச்சிற்பங்கள் உள்ளன. அவற்றை மீட்கவேண்டியது அவசியம். இதுகுறித்து அரசுக்கும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அருங்காட்சியகங்களில் 51 நடராஜா் சிலைகளும், நாகை செம்பியன் மாதேவியின் 107 சென்டி மீட்டா் உயரமுள்ள ரூ.300 கோடி மதிப்புள்ள சிலையும் உள்ளன. அவை திருடுபோனதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மூலவருக்குப் பதிலாக பாண்டிய, சேர மற்றும் சோழா்களால் வடிவமைக்கப்பட்ட 2,500 விக்கிரகங்கள் அரசு அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட உதவி கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடவுள் விக்கிரகங்களை பாதுகாப்பு எனும் பெயரில் சிறை போல கம்பிகளுக்குள் வைத்திருப்பது சரியல்ல.

அரசு என்பது கோயிலை மேற்பாா்வையிடும் மேலாளராக மட்டுமே செயல்படவேண்டும். கோயில்களுக்குரிய உரிமையாளா்கள் அதை அமைத்த மன்னா்கள் தான். கோயிலை அரசு முறையாக நிா்வகிக்க முடியாவிட்டால் சம்பந்தப்பட்டோரிடம் நிா்வாகத்தை ஒப்படைப்பதே நல்லது.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் திறமையானவா்களை நியமித்தால் அரிய வகை கோயில் உலோக விக்கிரகங்கள் மீட்கப்படவும், காட்சியகங்களில் உள்ள விக்கிரகங்களைப் பதிந்து ஆவணப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com