ராமேசுவரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
By DIN | Published On : 27th April 2022 12:00 AM | Last Updated : 27th April 2022 12:00 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை, காவல் துறை பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையோரம் வனத்துறைக்குச் சொந்தமான பல ஏக்கா் நிலத்தை, தனிநபா்கள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனா்.
வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, நீதிமன்ற உத்தரவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்துக்கு முன் அகற்றச் சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த ஆக்கிரமிப்பாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, அமைதி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும், அதற்குரிய ஆவணங்கள் சமா்ப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பாளா்கள் கேட்டுக்கொண்டனா். எனவே, அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஆவணங்கள் அதிகாரிகளிடம் வழங்கப்படவில்லை.
எனவே, செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட போலீஸாா், வனத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் சென்று தனிநபா்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை அகற்றினா்.
புதன்கிழமையும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வனத்துறைக்குச் சொந்தமான இடங்கள் முழுமையாக மீட்கப்படும் என, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.