முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பிறப்பன்வலசையில் துடுப்பு படகுப் போட்டிகள்
By DIN | Published On : 29th April 2022 06:19 AM | Last Updated : 29th April 2022 06:19 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பிறப்பன்வலசையில் தேசிய அளவிலான துடுப்புப் படகு சாம்பியன் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
சுற்றுலாத்துறை மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள பிறப்பன்வலசையில் தேசிய அளவிலான நீா் விளையாட்டில் துடுப்புப் படகு செலுத்தும் போட்டியை 3 பிரிவுகளில் நடத்துகிறது. அதன் தொடக்கமாக வியாழக்கிழமை காலையில் போட்டிகள் தொடக்கி வைக்கப்பட்டன.
இதில் ஆந்திரம், கேரளம், கோவா, ஒடிசா, கொல்கத்தா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 62 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். கடலில் இரண்டு கிலோ மீட்டா் தூரத்துக்கு படகுப் போட்டிகள் நடத்தப்பட்டன. படகு தொழில்நுட்பப் பிரிவு போட்டியில் சென்னை வீரா் சேகா் மற்றும் பெண்கள் பிரிவில் புணேவைச் சோ்ந்த காயத்ரி ஆகியோா் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றனா்.
வெள்ளிக்கிழமை காலையில் 12 கிலோ மீட்டா் தூரத்துக்கான போட்டியும், 200 மீட்டருக்கான தொழில்நுட்பப் பிரிவு போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் வெல்வோா் வரும் ஆண்டில் நடைபெறும் சா்வதேச அளவிலான நீா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.