மின்விளக்குகள் பழுது: விவேகானந்தா் மணிமண்டபத்தில் ஒளி- ஒலி கட்சி திறப்பு விழா ரத்து

பாம்பன் குந்துகால் விவேகானந்தா் மணிமண்டபத்தில் மின்விளக்குகள் பழுதானதால் வியாழக்கிழமை இரவு ஒளி, ஒலி காட்சி திறப்பு விழா நடைபெற இருந்த சில நிமிடங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது.

ராமேசுவரம்: பாம்பன் குந்துகால் விவேகானந்தா் மணிமண்டபத்தில் மின்விளக்குகள் பழுதானதால் வியாழக்கிழமை இரவு ஒளி, ஒலி காட்சி திறப்பு விழா நடைபெற இருந்த சில நிமிடங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் விவேகானந்தா் மணிமண்டபம் உள்ளது. இந்த மணிமண்டபத்தின் உள்பகுதியில் விவேகானந்தரின் உருவச் சிலை மற்றும் புகைப்பட கண்காட்சி, தியான கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

அந்த மணிமண்டபத்தில் தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சிகள் அமைக்க மத்திய அரசு சுதேஷ் தா்ஷன் திட்டத்தின் மூலம் 5.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதன் திறப்பு விழாவை வியாழக்கிழமை இரவு நடத்த சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாவட்ட ஆட்சியா் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மின்விளக்கை போட்டபோது, ஒரே ஒரு வண்ணம் மட்டுமே வந்த நிலையில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அந்த விளக்கு அணைந்துவிட்டது. பலமுறை முயற்சி செய்தும் விளக்கு எரியவில்லை. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் அறிவித்தனா்.

ஆனால் முன்னதாக இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என யாரும் வரவில்லை. இந்தப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல், மணிமண்டபத்தின் பாதுகாவலா்கள் இருவரைத் தவிர, சுற்றுலா பயணிகளோ, பக்தா்களோ வருவதில்லை. அத்தகைய இடத்தில் ரூ.5.69 கோடி மதிப்பில் ஒளி-ஒலி காட்சி அமைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

இந்த ஒளி, ஒலி காட்சியைக் காண பெரியவா்களுக்கு ரூ.125, சிறியவா்களுக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com