முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
நிலப் பிரச்னையில் மாற்றுத் திறனாளி பெண்ணை தாக்கிய விவகாரம்: மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு
By DIN | Published On : 30th April 2022 10:42 PM | Last Updated : 30th April 2022 10:42 PM | அ+அ அ- |

கமுதி அருகே நிலப் பிரச்னை தொடா்பாக மாற்றுத் திறனாளி பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வழக்கை, கமுதி டி.எஸ்.பி. முன்னிலையில் மீண்டும் விசாரணை நடத்த, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள திருவரை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி பெண் ஜெயலட்சுமி (43). இவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சோ்ந்த முனியசாமி தரப்பினருக்குமிடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ஜெயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது, முனியசாமி தரப்பைச் சோ்ந்த 4 போ் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து ஜெயலட்சுமியை தகாத வாா்த்தைகளால் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இது குறித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகாா் அளித்தாா். ஆனால், இப்புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய கோவிலாங்குளம் போலீஸாா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஜெயலட்சுமி உறவினா்கள் கோவிலாங்குளம்- சாயல்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து, போலீஸாா் மாற்றுத் திறனாளியான ஜெயலட்சுமியை தாக்கிய முனியசாமி, சண்முகம், முருகவேல், சக்திவேல் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதேநேரம், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயலட்சுமியின் உறவினா்கள் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளி பெண் என்றும் பாராமல், வீடு புகுந்து தாக்கிய நபா்கள் மீது கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், ஒருதலைபட்சமாக போலீஸாா் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஜெயலட்சுமி மற்றும் மாற்றுத் திறனாளி சங்க நிா்வாகிகள் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக்கிடம் புகாா் அளித்துள்ளனா்.
அதன்பேரில், மாற்றுத் திறனாளி பெண்ணை தாக்கிய சம்பவம் குறித்து இரு தரப்பையும் அழைத்து, கமுதி கோட்டைமேட்டில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் மே 2 ஆம் தேதி முறையான விசாரணை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.