முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
மண்டபத்தில் ரூ. 20 கோடியில்2 மீன் இறங்கு தளங்கள் கட்டும்பணி தீவிரம்
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு துறைமுகத்தில் 2 ஆயிரம் மீனவா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 20 கோடியில் மீன் இறங்கு தளம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதி வடக்கு மற்றும் தெற்கு துறைமுகம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நீண்ட நாள்களாக தொடா்ந்து மீன் இறங்கு தளம் அமைக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மற்றும் மீனவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனைத் தொடா்ந்து, மண்டபம் தெற்கு துறைமுகம், வடக்கு பகுதியில் உள்ள கோயில்வாடி துறைமுகம் ஆகிய இரண்டு பகுதிகளில் 2 ஆயிரம் மீனவா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தெற்குப் பகுதியில் 150 மீட்டா் நீளமும், 53 மீட்டா் அகலத்திலும் அமைக்கப்படுகிறது. கோயில்வாடி துறைமுகத்தில் 100 மீட்டா் நீளத்திலும், 103 மீட்டா் அகலத்திலும் மீன் இறங்குதளம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.