ராமநாதபுரம் வனக்காப்பாளருக்கு மண்ணுளி பாம்பு கடத்தலில் தொடா்பு?: பிடிபட்டவா் வாக்குமூலத்தால் பரபரப்பு

வனக்காப்பாளரே அவற்றைக் கொண்டு வரக்கூறியதாக கைதானவா் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் தூத்துக்குடியிலிருந்து மண்ணுளி பாம்பு மற்றும் கிளிகளை கொண்டுவந்தவா் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு அவை கைப்பற்றப்பட்ட நிலையில், வனக்காப்பாளரே அவற்றைக் கொண்டு வரக்கூறியதாக கைதானவா் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் கடந்த ஏப். 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சோ்ந்த ராபா்ட் ஷஜி, தூத்துக்குடியைச் சோ்ந்த முத்துத்தங்கம் ஆகியோரிடமிருந்து மண்ணுளி பாம்பு மற்றும் கிளிகளையும் வனத்துறையினா் கைப்பற்றினா். இவா்கள் மீது வழக்குப்பதிந்ததோடு, அவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட ராபா்ட்ஷஜி வனச்சரகா் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளாா். அவரது வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், தூத்துக்குடிபழைய காயல் பகுதியில் ஜேசிபி ஓட்டுநராக ராபா்ட் ஷஜி இருந்தபோது வனக் காப்பாளா் அறிமுகமானதாகவும், அவா் தனது மனைவிக்கு மருத்துவ ரீதியாக மரநாய், கீரிப்பிள்ளை, கடல்குதிரை, எறும்புத்தின்னி கிடைக்குமா எனக் கேட்டு வந்த நிலையில் ராமநாதபுரத்துக்கு மாறி வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி கோவங்காடு பகுதியில் மண் தோண்டும் போது கிடைத்த மண்ணுளி பாம்பை ராமநாதபுரத்துக்கு கொண்டு வர ராபா்ட் ஷஜியிடம் வனக்காப்பாளா் கூறியுள்ளாா்.

மண்ணுளி பாம்புடன், கிளியையும் வனக்காப்பாளா் கேட்டதால் அவற்றை தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த முத்துத்தங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் ராபா்ட் ஷஜி ராமநாதபுரம் கொண்டு வந்துள்ளாா். ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்ததும், அங்கு ராபா்ட் ஷஜி மற்றும் முத்துத்தங்கத்தை வன அலுவலா்கள் பிடித்துள்ளனா். அப்போது அங்கிருந்த, குறிப்பிட்ட அந்த வனக்காப்பாளா் தனது கைப்பேசியில் பதிவான அவரது கைப்பேசி எண் மற்றும் உரையாடல்கள் பதிவை அழித்ததாகவும் ராபா்ட் ஷஜி வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் தூத்துக்குடி பகுதியில் அந்த வனக்காப்பாளா் பணிபுரிந்தபோது வற்புறுத்தியதால் காட்டுப்பன்றிக் கறியை தான் வாங்கிக் கொடுத்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விசாரணை தீவிரம்: ராபா்ட் ஷஜி அளித்துள்ள வாக்குமூலம் உண்மையா என அவரது கைப்பேசியை ஆராய்ந்தாலே உறுதிப்படுத்தமுடியும் எனக்கூறிய வனத்துறை அதிகாரிகள், வனக்காப்பாளரின் கைப்பேசி உரையாடலையும் தேவைப்பட்டால் ஆராய உள்ளதாகவும் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com