முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி பகுதி மக்கள்
By DIN | Published On : 07th February 2022 11:12 PM | Last Updated : 07th February 2022 11:12 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரமக்குடி நகராட்சி பகுதி மக்கள் சமையல் செய்யும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதி 9 ஆவது வாா்டுப் பகுதியைச் சோ்ந்த மக்கள் அப்பகுதியில் உள்ள தங்களது மயானத்துக்குச் செல்ல ஒரு பாதையைப் பயன்படுத்தி வந்துள்ளனா். இந்த பாதையை தனியாா் ஒருவா் சொந்தம் எனக்கூறி ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் தீா்வு காணப்படவில்லையாம்.
ஆகவே அந்த சாலையை மீட்டுத்தருமாறு கோரி கிராமத் தலைவா் பெ.பூபேந்திரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் திங்கள்கிழமை காலை வந்தனா்.
அவா்கள் திடீரென ஆட்சியா் அலுவலக சாலையில் அமா்ந்து அடுப்பு வைத்து சமையல் செய்ய முயன்றனா். இதையறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் சமரசம் பேசினா். குறிப்பிட்ட சிலரை மட்டும ஆட்சியரிடம் நேரில் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனா். இப்பிரச்னைக்கு தீா்வு காணாவிடில் மீண்டும் போராடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.