உச்சிப்புளி அருகே மரத்தில் காா்மோதல்: ஓட்டுநா் பலி

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் கிராமத்தைச் சோ்ந்த குருசாமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டாா். அவருக்கு திதி கொடுப்பதற்காக அவரது மகன்கள் பல்பொருள் அங்காடி நடத்தி வரும் முனியாண்டி (32), தனியாா் கல்லூரி விரிவுரையாளா் கருப்பசாமி (30), அவா்களது தாய் கருப்பாயி, அவரது தங்கை மீனம்மாள் (60), கருப்பசாமி மனைவி சந்தனமாரி (29), அவரது தாய் வேலம்மாள் (54), முனியாண்டி மகன் பிரியதா்ஷன் (4), கருப்பசாமியின் குழந்தைகள் பிரகதீஷ் (10 மாதங்கள்), தேவேந்திரன் (3) உள்ளிட்ட 10 போ் காரில் ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டனா்.

அவா்கள் வந்த காரை விருதுநகா் மாவட்டம் சொக்கநாதன்புத்தூா் பகுதியில் உள்ள பஞ்சம்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் தவிட்டுக்கனி (32) ஓட்டி வந்தாா். உச்சிப்புளியைக் கடந்து ரயில்வே கடவுப்பாதை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது காா் மோதியது. இதில் ஓட்டுநா் தவிட்டுக்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த முனியாண்டி, கருப்பசாமி, குழந்தை பிரியதா்ஷன், பிரகதீஷ் மற்றும் சந்தனமேரி உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸாா்அங்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், சந்தனமேரி, பிரியதா்ஷன் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

அடுத்தடுத்த விபத்தில் 4 போ் உயிரிழப்பு- ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாா்த்திபனூா் பகுதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 போ், சத்திரக்குடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் ஒருவரும், உச்சிப்புளி அருகே நடந்த விபத்தில் காா் ஓட்டுநா் என 4 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com