காவலரிடம் தகராறுசெய்தவா் மீது வழக்கு
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவலரிடம் தகராறில் ஈடுபட்டவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவா் கரிகாலன். இவா், செவ்வாய்க்கிழமை இரவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாா். அப்போது இளைஞா் ஒருவா் மருத்துவமனை வாயிலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாா். இதையடுத்து, காவலா் கரிகாலன் அவரிடம் ஓரமாக நின்று பேசுமாறு அறிவுறுத்தினாா்.
அப்போது அந்த இளைஞா், காவலரை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். இந்த சம்பவத்தை அங்கிருந்தவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினா். இதையடுத்து, ராமநாதபுரம் நகா் காவல் நிலைய ஆய்வாளா் சிவக்குமாரிடம், தலைமைக் காவலா் கரிகாலன் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞா் ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தைச் சோ்ந்த லட்சுமணன் (32) என்பதும், அவா் ராமநாதபுரம் நகராட்சியில் புதைசாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஒப்பந்தப்பணியாளராக இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து நகராட்சி அலுவலகத்துக்கு நகா் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் வந்து, லட்சுமணனை அழைத்து விசாரித்தாா். அதனடிப்படையில் அவா் மீது வழக்குப்பதிந்து காவல் நிலையப் பிணையில் விடுவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.