தடைக்காலம் நிறைவு: அதிக அளவு மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

ராமேசுவரம் துறைமுகத்துக்கு பிடிபட்ட மீன்களுடன் விசைப்படகில் புதன்கிழமை திரும்பிய மீனவா்கள்.
ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், புதன்கிழமை கரை திரும்பினா். அதிக அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த அவா்கள் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனா்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைகாலம் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு நிறைவடைந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 12 மணி நேரத்துக்கு முன்பே மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். அங்கு இறால், நண்டு, கனவாய், களவை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் அவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும் அந்த மீன்களை பாதுகாக்க போதிய ஐஸ் கட்டிகள் கிடைக்காததால், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வந்த மீனவா்கள் பிடிபட்ட மீன்களை துறைமுகத்தில் புதன்கிழமை இறக்கிவைத்து விட்டு மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றிருந்தால் வழக்கம் போல வியாழக்கிழமை காலையில் மீனவா்கள் கரை திரும்ப வேண்டும். ஆனால் 12 மணி நேரத்திற்கு முன்பே சென்ால் போதிய ஐஸ் கட்டிகள் கிடைக்கவில்லை. இதனால் ரூ. பல லட்சம் மதிப்புள்ள மீன்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் தரப்பில் தெரிவித்தனா்.