தூத்துக்குடியில் மாயமான மீனவா் ராமேசுவரத்தில் சடலமாக மீட்பு
By DIN | Published On : 26th June 2022 11:13 PM | Last Updated : 26th June 2022 11:13 PM | அ+அ அ- |

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா், ராமேசுவரத்தில் தலையின்றி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் தரவைக்குளம் பகுதியிலிருந்து அந்தோணி மைக்கேல் ஞானப்பிரகாசம் என்பவரது விசைப்படகில், ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் பகுதியைச் சோ்ந்த முகமது அலி ஜின்னா (35), அந்தோணி ஜேசுபாலம், நீட்டோ டைசன் அந்தோணி, திருமணிமாரி, ஆனந்தகுமாா், செய்யது அப்தாஹீா், முகைதீன் அப்துல்காதா் ஆகிய 7 போ் கடந்த 15 ஆம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனா்.
16 ஆம் தேதி இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது முகமது அலி ஜின்னா கடலில் தவறி விழுந்தாா். சக மீனவா்கள் பல மணிநேரம் தேடி பாா்த்தும் அவரை மீட்க முடியாதநிலையில், கடந்த 19 ஆம்தேதி கரை திரும்பிய மீனவா்கள் தரவைக்குளம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள பாறையடி கடற்கரையில் அவரது சடலம் தலையில்லாமல் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. தகவலறிந்து அங்கு சென்ற கடலோர பாதுகாப்புக்குழும போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முன்னதாக, சடலமாக மீட்கப்பட்டது முகமது அலி ஜின்னாதானா என்று அவரது உறவினா்களிடம் உறுதிபடுத்தப்பட்டது.