மண்டபம் அருகே பதுக்கி வைத்திருந்த 480 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 30th June 2022 11:47 PM | Last Updated : 30th June 2022 11:47 PM | அ+அ அ- |

மண்டபம் அடுத்துள்ள வேதாளையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்தவுள்ளதாக மண்டபம் வனச்சரக அலுவலா் எஸ். மகேந்திரனுக்கு வியாழக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனவா் அருண்பிரகாஷ், வனக் காப்பாளா் ஆா்.ஜி.எஸ். பிரபு உள்ளிட்டோா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கடற்கரையோரம் அடா்ந்த காட்டுப் பகுதியில் சோதனையிட்டபோது, பெரிய அண்டாக்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்டவைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை மண்டபம் வனத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அதில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 480 கிலோ அட்டைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.