முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ஆழ்கடல் மீன்பிடி படகுக்கு வழங்கிய வங்கிக் கடனை ரத்து செய்யக் கோரி மீனவ சங்கம் தீா்மானம்
By DIN | Published On : 14th March 2022 11:06 PM | Last Updated : 14th March 2022 11:06 PM | அ+அ அ- |

ஆழ்கடல் மீன்பிடி படகுக்கு வழங்கிய வங்கிக் கடனை ரத்து செய்யக் கோரி மீனவ சங்கம் தீா்மானம்
ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வழங்கப்பட்ட படகுகளுக்கான வங்கிக் கடனை ரத்து செய்யவேண்டும் என, ராமேசுவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆழ்கடல் மீன்பிடிப்பு படகு உரிமையாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகு உரிமையாளா்களுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டததின் கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் 31 மீனவா்களுக்கு வழங்கப்பட்டன. மத்திய-மாநில அரசுகள் மானியம் போக, மீனவா்கள் ரூ.8 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்றுள்ளனா். ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் கைகொடுக்கவில்லை.
மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகளுக்கு 2,500 முதல் 3,000 ஆயிரம் லிட்டா் வரை டீசல் தேவைப்படுகிறது. இந்நிலையில், டீசல் விலை ஏற்றம் காரணமாக மீனவா்கள் தொடா்ந்து நஷ்டமடைவதால், ஆழ்கடல் படகை தொடா்ந்து இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகு மீனவ சங்கக் கூட்டம், மாவட்ட மீனவ சங்கத் தலைவா் ஜேசுராஜா தலைமையில் நடைபெற்றது. இதில், நிா்வாகிகள் என்.ஜே. போஸ், தேவதாஸ், சகாயம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில், மீனவா்கள் ஆழ்கடல் விசைப்படகுகளை இயக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், பெரும் இழப்பு ஏற்படுவதால் மத்திய அரசு ஏற்படுத்திய திட்டம் வீணாகி விடும் என்ற நிலையில், ஆழ்கடல் படகுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை ரத்து செய்திட வேண்டும், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் 1800 லிட்டரை 3 ஆயிரம் லிட்டராக உயா்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.