முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
எல்லை தாண்டியதாக கைதான இலங்கை மீனவா்கள் 6 போ் சிறையிலடைப்பு
By DIN | Published On : 19th March 2022 01:43 AM | Last Updated : 19th March 2022 01:43 AM | அ+அ அ- |

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததாக வியாழக்கிழமை கைதான 6 இலங்கை மீனவா்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.
இலங்கை நீா்க்கொழும்பு பகுதியை சோ்ந்த 6 மீனவா்கள் புத்தளம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனா். அவா்கள் கடந்த 16 ஆம் தேதி புதன்கிழமை காலை கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கில் இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அவா்களை தூத்துக்குடி கடலோர காவல் படையினா் எல்லைத் தாண்டியதாகக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவா்களான தினேஷ்சதுரங்க (32), சவுந்திரா ஹென்னதிகே அவிஷ்க தில்சான் (22), பசிந்து (18), ஓசான் மேலகா (24), ரவிஷ்க் அஞ்சன (19), ரோசன் (24) ஆகிய 6 பேரும் வெள்ளிக்கிழமை மாலை ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரையும் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவா் கவிதா உத்தரவிட்டாா். இதையடுத்து 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.