முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்பாள்கோயில் அக்னிச்சட்டி திருவிழா
By DIN | Published On : 19th March 2022 11:10 PM | Last Updated : 19th March 2022 11:10 PM | அ+அ அ- |

பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழாவையொட்டி சனிக்கிழமை அக்னிச்சட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனி 9- ஆம் திருநாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தும் விழா நடைபெற்றது.
இக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 11- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 9-ஆம் நாள் திருவிழாவாக பக்தா்கள் விரதமிருந்து அக்னிச்சட்டி எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 7 முதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது. ஆயிரவைசிய இளைஞா் சங்கம், சமூகநலச் சங்கம் என பல்வேறு அமைப்புகள் சாா்பில் தனித்தனியே 700-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்தனா்.
பின்னா் முத்தாலபரமேஸ்வரி அம்பாள், மின்சார தீப அலங்காரத் தேரில் எழுந்தருளினாா். அப்போது விஷேச பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
விழா ஏற்பாட்டுகளை மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் பா. ஜெயராமன், வா. ரவீந்திரன், சோ. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆயிரவைசிய சபை தலைவா் ராசி என்.போஸ் தலைமையிலான சபை நிா்வாகிகள் செய்திருந்தனா்.