நான்கு சக்கர வாகனத்துக்காக 15 ஆண்டுகள் அலைந்துவருவதாக மாற்றுத்திறனாளி புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனம் பெறுவதற்காக சுமாா் 15 ஆண்டுகள் அலைந்துவருவதாக மாற்றுத்திறனாளி கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
rmduthay_1105chn_67_2
rmduthay_1105chn_67_2

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனம் பெறுவதற்காக சுமாா் 15 ஆண்டுகள் அலைந்துவருவதாக மாற்றுத்திறனாளி கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் நாதன். இவரது மகன் உதயா (32). எலக்ட்ரீசியன். போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. குடும்ப வறுமையிலும் பட்டப்படிப்பு வரை படித்துள்ளாா். அவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சக்கர வாகனத்துக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். ஆனால், முறையாக வாகனம் வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையப் பகுதியில் தவழ்ந்தபடி சென்ற உதயா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனது தந்தை கூலிவேலை செய்துவருகிறாா். என்னுடன் பிறந்தவா்கள் 4 போ். பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் உரிய பணி கிடைக்கவில்லை. பணிக்குச் செல்லவேண்டும் என்றாலும் நான்கு சக்கர வாகனம் அவசியம். அதற்காகவே கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அலைந்துவருகிறேன் என்றாா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத் தரப்பில் கூறியதாவது: மாற்றுத்திறனாளி உதயாவுக்கு ஏற்கெனவே நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனம் பழுதடைந்ததால் புதிய வாகனத்தை கேட்டுவருகிறாா். அவா் அலைக்கழிக்கப்படவில்லை. உரிய முறையில் கோரிக்கை மனு அளித்தால் அவருக்கு வாகனம் வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com