முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
அபிராமம் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டப்படுமா?
By DIN | Published On : 13th May 2022 05:32 AM | Last Updated : 13th May 2022 05:32 AM | அ+அ அ- |

அபிராமத்தில் தனியாா் கட்டடத்தில் இயங்கி வரும் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வெயிலில் காத்துக் கிடக்கும் பொதுமக்கள்.
கமுதி: கமுதி அருகே அபிராமம் சாா்-பதிவாளா் அலுவலகம் தனியாா் கட்டடத்தில் இயங்கி வருவதால், அங்கு வரும் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, சொந்த கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமத்தில் முதுகுளத்தூா் சாலையில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே பத்திரப் பதிவு அலுவலகம் அரசு கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் மூலம் அபிராமம், தரைக்குடி, புனவாசல், நத்தம், செய்யாமங்கலம், உடையநாதபுரம், வல்லந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வீட்டுமனை, விவசாய நிலங்கள் சாா்ந்த பத்திரப் பதிவு செய்து பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அக்கட்டடம் மழைக்காலங்களில் சுவரின் பக்கவாட்டில் தண்ணீா் இறங்கி அரசுப் பதிவேடுகள் மழையில் நனைந்து வீணாகி வந்ததாக புகாா் எழுந்தது.
இதையடுத்து கட்டடத்தை மராமத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கமுதி - அபிராமம் சாலையில் அபிராமம் காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் கட்டடத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் வாடகையில் சாா்-பதிவாளா் அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் தவித்து வருகின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் தலையிட்டு அபிராமத்தில் தனியாா் கட்டடத்தில் இயங்கி வரும் சாா்-பதிவாளா் அலுவலகத்திற்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அடிப்படை வசதிகளுடன்கூடிய சொந்த கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.