திருவாடனை தேரோடும் வீதிகளை சீரமைக்க ரூ. 12 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருவாடானையில் தேரோடும் வடக்கு ரத வீதி மற்றும் மேல ரத வீதிகளை சீரமைக்க ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றியக்குழுக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.

திருவாடானை: திருவாடானையில் தேரோடும் வடக்கு ரத வீதி மற்றும் மேல ரத வீதிகளை சீரமைக்க ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றியக்குழுக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாடானை ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழுத் தலைவா் முகமது முக்தாா் தலைமை வகித்தாா். ஆணையாளா் பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ, துணைத்தலைவா் பாண்டி செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருவாடானையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதிரத்தினேஸ்வரா் கோயில் தேரோடும் வீதிகள் மிகவும் சேதமடைந்துள்ளதால், ஒன்றிய நிதியிலிருந்து வடக்கு ரதவீதிக்கு ரூ. 7 லட்சமும் மேலரத வீதிக்கு ரூ.5 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து சீரமைக்கப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைவா்:தற்போது திருவாடானை வட்டாரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் குடிநீா் தட்டுப்பாட்டை மக்கள் சந்தித்து வருகின்றனா்.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி: காவிரி கூட்டு குடிநீா் திட்டத்தில் போதுமான அளவு தண்ணீா் வரவில்லை. இதனால் வரும் தண்ணீா் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மோட்டாா் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

தலைவா்: உள்ளூா் பகுதிகளில் குடிநீா் ஆதாரங்களை ஆய்வு மேற்கொண்டு போதுமான குடிநீா் ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீா் பிரச்சினையை தீா்க்க வேண்டும் அதற்குரிய திட்டங்களை அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி: மாவட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

உறுப்பினா் சசிக்குமாா்: கடம்பூா் பகுதியில் கடம்பூா் கிடங்கூா், கூகுடி, கட்டவிளாகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது.

மின்வாரிய அதிகாரி: தற்போது திருவாடானை பகுதிக்கு 10 மின்மாற்றிகள் புதிதாக வந்துள்ளன. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூகநலத் வட்டாட்சியா்: பெரும்பாலான ஊராட்சி மன்றங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள் பட்டியலில் பெரும்பாலானவா்கள் பெயா் விடுபட்டுள்ளது.

தலைவா்: இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு பல்வேறு அரசியல் பிரமுகா்கள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், பாராளுமன்ற உறுப்பினா்கள்

கொண்டு சென்றுள்ளனா். 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பட்டியல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுநாள் வரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் இதுகுறித்து வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com