மண்டபத்தில் 1.1 டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 போ் கைது
By DIN | Published On : 07th October 2022 12:00 AM | Last Updated : 07th October 2022 12:00 AM | அ+அ அ- |

ராமேசுவரம் அருகே மண்டபத்தில் பதப்படுத்தி வைத்திருந்த 1,100 கிலோ கடல் அட்டைகளை காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைப்பற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்படம் வேதாளை கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பல லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளைப் பதப்படுத்துவதாக காவல்துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலையில் அப்பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வேதாளை கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதப்படுத்திக்கொண்டிருந்த 3 பேரை பிடித்தனா். அவா்களிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் மரைக்காயா், குலாம் முகமது, நஜூப் அகிய 3 பேரை கைது செய்து மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனா். கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கை வழியாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தவிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மண்டபம் வனத்துறையினா் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.