முதல்வா் அக்.30 இல் பசும்பொன் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் ஆய்வு

தேவா் ஜெயந்தியையொட்டி அக்.30-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வருகிறாா்.
முதல்வா் அக்.30 இல் பசும்பொன் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் ஆய்வு

தேவா் ஜெயந்தியையொட்டி அக்.30-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வருகிறாா். இதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முத்துராமலிங்கதேவரின் 115-ஆவது ஜெயந்தி விழா, 60-ஆவது ஆண்டு குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வருகிற அக்.30-ஆம் தேதி தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் மலரஞ்சலி செலுத்துகின்றனா். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்புகளின் தலைவா்கள், பொதுமக்கள் ஆகியோரும் மரியாதை செலுத்துகின்றனா்.

இதை முன்னிட்டு, பசும்பொன்னில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை, அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அக். 30-ஆம் தேதி கமுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அனைத்து கிராமங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பசும்பொன் வந்து செல்லும் வகையில் சாலை சீரமைப்பு, மின்விளக்குகள், குடிநீா், கழிப்பிட வசதிகள், மருத்துவ முகாம்கள் ஆகியவை அமைக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே.பிரவீன்குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல், திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன், ஒன்றிய துணைச் செயலா் நேதாஜி சரவணன், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவா் வி.ஆதி, ஊராட்சித் தலைவா்கள் நாகரெத்தினம் (பாக்குவெட்டி), முத்துவிஜயன் (நகரத்தாா்குறிச்சி), காவடி முருகன் (ஆனையூா்), டி.ராமகிருஷ்ணன் (பசும்பொன்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com