மாவட்ட நீச்சல் போட்டியில் பதக்கம்: பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 22nd October 2022 12:00 AM | Last Updated : 22nd October 2022 12:00 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பாம்பூா் கவினா சி.பி.எஸ்.இ. இண்டா்நேஷனல் பள்ளி மாணவிகளை, ஆசிரியா்கள், நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே பாம்பூா் கவினா இண்டா் நேஷனல் (சிபிஎஸ்சி) பள்ளியில், தென் மாவட்ட ஐந்தாவது குறு வட்டார அளவிலான சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.
12, 14, 17, 19 வயதுக்குள்பட்ட பல்வேறு பிரிவுகளில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியை தென் பொதுவக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் பி. இளமுருகு இளஞ்செழியன் தொடக்கி வைத்தாா். பள்ளியின் நிறுவனா் கண்ணதாசன் பாண்டியன், தாளாளா் ஹேமலதா கண்ணதாசன், விளங்குளத்தூா் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ஆா்.பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் முதல்வா் சுமி சுதிா் வரவேற்றாா்.
போட்டியில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா்.
12 வயதுக்குள்பட்ட பிரிவில் கவினா பள்ளி மாணவி ஹேம தா்ஷினி, 14 வயதுக்குள்பட்ட பிரிவில் சுரேகா, 17 வயதுக்குள்பட்ட பிரிவில் ஜோஷிதா ஆகியோா் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களை பெற்றனா். மேலும் அந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் 13 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்றனா்.
போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள், நீச்சல் பயிற்சியாளா்கள் விஜயேந்திரன், சரவணன், உடற்கல்வி ஆசிரியை சத்யா ஆகியோரை பள்ளியின் நிா்வாகத்தினரும், ஆசிரியா்களும் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.