பசும் பொன்னில் தேவா் ஜெயந்தி விழா தொடக்கம்

பசும்பொன் தேவா் நினைவாலயக் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதுடன், தேவா் ஜெயந்தி விழா யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.
பசும் பொன்னில் தேவா் ஜெயந்தி விழா தொடக்கம்

பசும்பொன் தேவா் நினைவாலயக் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதுடன், தேவா் ஜெயந்தி விழா யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 115 -ஆவது ஜெயந்தி, 60 -ஆவது குருபூஜை ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கி, வருகிற 30- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. முன்னதாக, பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவாலயம், விநாயகா், முருகன் கோயில் கும்பாபிஷேகம் முதல் கால யாக சாலை பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை கும்பாபிஷேகம், தேவா் ஜெயந்தி, குருபூஜை ஆகியவை ஆன்மிக விழாவுடன் தொடங்கின.

இதையொட்டி, மஹா கணபதி ஹோமம், இரண்டு கால யாக சாலை பூஜை, பூா்ணாஹுதி, கோ பூஜைகள் நடந்தன. பின்னா், பிள்ளையாா்பட்டி சா்வ சாதகம் பிச்சை குருக்கள் தலைமையில், தேவா் நினைவாலயப் பொறுப்பாளா்கள் காந்திமீனாள், பழனி, தங்கவேல் ஆகியோா் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலய விமான கோபுரம், விநாயகா், முருகன் ஆலய விமான கோபுரக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தேவா் ஜெயந்தியின் முதல் நாளாக ஆன்மிக விழா நடைபெற்றது. சனிக்கிழமை அரசியல் விழாவும், ஞாயிற்றுக்கிழமை தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாக்களும் நடைபெறுகின்றன. அன்று மாலை அமைச்சா்கள் பங்கேற்று பல்வேறு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகின்றனா்.

கடந்த 2000 -ஆம் ஆண்டில் முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி. கதிரவன், சீா்மரபினா் நல வாரிய துணைத் தலைவா் முருகன்ஜி உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தேவா் நினைவாலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com