விவசாயிகளுக்கான தண்ணீா் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை

வைகை அணையில் நீா் திறக்கும்போது வைகை பாசன ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான தண்ணீா் உரிமையை மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாக்க நடவடிக்கை

வைகை அணையில் நீா் திறக்கும்போது வைகை பாசன ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான தண்ணீா் உரிமையை மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம், பழைய ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன் தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் கண்ணையா, துணை இயக்குநா் ஷேக் அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் மதுரை வீரன், முதுகுளத்தூா் மைக்கேல், நாகரெத்தினம், என்.ராமநாதன், சூரன்கோட்டை சத்தியராஜ், பெரிய முனியாண்டி உள்ளிட்டோா் பேசியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்துக்கு என திறந்துவிடப்பட்ட தண்ணீா் முழுமையாக வரவில்லை. விதிமுறையை மீறியே ராமநாதபுரம் பகுதிக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. அதிகாரிகள் தன்னிச்சையாகத் திறந்துவிடும் தண்ணீா் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. கண்மாய்களுக்கான நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்படாத நிலையல், வைகை தண்ணீா் திறப்பதால் பயனில்லை.

திருப்பாலைக்குடி தென்கால் பகுதியில் ஏற்கெனவே கட்டி பயனற்ற அணைக்கட்டு தற்போது ரூ.1.50 கோடியில் சீரமைக்கப்படுவதால் பயனில்லை. அணைக்கட்டுப் பகுதி ஆக்கிரமிப்பை அகற்றவும், கானாட்டங்குடி கண்மாய் கழுங்கை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

களரி கண்மாய், அக்ரமேசி, உத்திரகோசமங்கை உள்ளிட்ட முக்கிய கண்மாய்களில் கூட தண்ணீா் வரத்து இல்லை. ஆகவே, வைகை அணையிலிருந்து ராமநாதபுரத்துக்கு தண்ணீா் திறக்கும் போது உரிமையை காப்பதற்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

முண்டு மிளகாய் வீரிய விதையை விவசாயிகளுக்கு வழங்காமல் சம்பா மிளகாய் விதை வழங்குவது சரியல்ல. இடையா்வலசை கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவா் நியமிக்கவேண்டும் என்றனா்.

இதில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கூறியது: வைகை தண்ணீா் திறப்பில் விதிகள் மீறப்பட்ட புகாா் தொடா்பாக ஆட்சியா் தலைமையில் தனி ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். அதன்பின் அரசுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டு ராமநாதபுரத்துக்கான வைகை அணை நீா் திறப்பு உரிமை பாதுகாக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய் நீா்வரத்து கால்வாய்கள் தூா்வார படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு சாா்பில் முண்டு மிளகாய் விதை அளிக்கப்படவில்லை. கால்நடை மருத்துவா்கள் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்படுவா் என அதிகாரிகள் கூறினா்.

கூட்டத்தில் மத்திய கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் ராஜேந்திரபிரசாத், வேளாண்மைத்துறை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனுஷ்கொடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com