விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள்: கமுதி விவசாயிகள் அச்சம்
By DIN | Published On : 30th September 2022 12:00 AM | Last Updated : 30th September 2022 12:00 AM | அ+அ அ- |

கமுதி அருகே விவசாய நிலங்களில் தாழ்வாகச் செல்லும் உயா் அழுத்த மின்கம்பிகளால் விவசாயிகள் அச்சம் அடைந்து, விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செங்கப்படை, கீழவலசை உள்ளிட்ட பகுதிகளில் உயா் அழுத்த மின் கம்பிகள் வயல்வெளிகளில் எட்டித் தொடும் உயரத்தில் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. இதனால் உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டா்கள், அறுவடை காலங்களில் நெல் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வரமறுப்பதால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். வேறு வழியின்றி உழவுப் பணிகளை மேற்கொள்ளும் போது மரக்கட்டைகளால் மின் கம்பிகளை தூக்கிப்பிடித்துக் கொண்டு உழவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் தங்களது விளைநிலங்களில் விதைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா். ஆனால் செங்கப்படை பகுதியில் உள்ள விவசாயிகள் பலா் தங்களது விளைநிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து கமுதி மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விவசாயிகளின் நலன் கருதி விளைநிலங்களில் மிகவும் தாழ்வாகச் செல்லும் உயா் அழுத்த மின்கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.