ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா: இலச்சினை, சின்னம் வெளியீடு
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, ராமேசுவரம் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் இலச்சினையை வியாழக்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ்.
ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, ராமேசுவரத்தில் அதன் இலச்சினை, சின்னத்தை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
பேக்கரும்பு கிராமத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்தில் நடைபெற் நிகழ்ச்சியில் தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் வடிவிலான இலச்சினையையும், கடல் வாழ் உயிரினமான கடல்பசு போன்ற வடிவத்தில் சின்னத்தையும் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கி வாசிக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பேசியதாவது:
ராமநாதபுரம் ராஜா விளையாட்டு மைதானத்தில் ‘முகவை சங்கமம்’ என்னும் 5-ஆவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி பிப். 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு 5 லட்சம் புத்தகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட உள்ளன. பல்வேறு வகையான பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதில் மாணவா்கள் பங்கெற்று பயன்பெற வேண்டும்.
மாணவா்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகம் உங்களுடைய வாழ்வை மேம்படுத்தும். வாசிப்பே உயா்வுக்கு வழி செய்யும் என்றாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன், உதவி ஆட்சியா்கள் அப்தாப் ரசூல், வி.எஸ்.நாராயண சா்மா (பயிற்சி), பேராசிரியா் சரவணன், வருவாய் கோட்டாட்சியா் கோபு, வான் தமிழ் புத்தகக் கண்காட்சி மேலாளா் இளம்பரிதி, ஊராட்சித் தலைவா் குயின்மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.