மீன்பிடித் தடைக் காலம் நிறைவு: கடலுக்குள் சென்றனா் பாம்பன் மீனவா்கள்
By DIN | Published On : 15th June 2023 10:28 PM | Last Updated : 15th June 2023 10:28 PM | அ+அ அ- |

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், தென் கடல் பகுதியான பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்களின் இனப் பெருக்க காலமான ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க மீன்வளத் துறை தடை விதித்தது. இந்தத் தடைக் காலத்தின் போது விசைப்படகுகளில் வா்ணம் பூசுவது, வலைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மீனவா்கள் மேற்கொண்டனா்.
மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் தென் கடல் பகுதியான பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 180-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று வியாழக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதால், அதிகளவில் மீன்கள் கிடைக்குமென மீனவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம், மண்டபம், தொண்டி, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல உள்ளதாக மீனவா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.