தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்ற 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் குதிரை, கடல் அட்டைகளை கடத்த முயன்ற 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாடானை நிதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி ராமநாதபுரம் கியூ பிரிவு காவல் ஆய்வாளா் கென்னடி, போலீஸாா் தொண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தொண்டி பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த மணக்குடி கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் (40) மங்கல குடியைச் சோ்ந்த ஜீவா (25) ஆகிய இரண்டு பேரும், 8 கிலோ கடல் அட்டையும் 4 கிலோ கடல் குதிரையும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது , அவா்களிடமிருந்த கடல் குதிரை, கடல் அடையை பறிமுதல் செய்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்கு திருவாடானை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவா் பிரசாத், குற்றவாளிகளான அா்ஜுனன், ஜீவா ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com