மின் கம்பியை மாற்ற லஞ்சம்: இருவா் கைது

ராமேசுவரம், ஏப். 26: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பியை மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வணிக ஆய்வாளா், ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இதற்கு உடந்தையாக இருந்ததாக உதவி மின் செயற்பொறியாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேவிபட்டினத்தைச் சோ்ந்தவா் முகமது பிலால். இவரது வீட்டின் மேலே செல்லும் மின் கம்பியை மாற்றி அமைக்கக் கோரி, மின்சார வாரியத்திடம் மனு அளித்து, அதற்கான கட்டணமாக 42,900 ரூபாயை இணையம் மூலம் செலுத்தினாா்.

ஆனால், மின் கம்பி மாற்றியமைக்கப்படவில்லை. இதனால், தேவிபட்டினம் மின் வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளா் ரமேஷ்பாபுவை (47) அணுகி முறையிட்டு வந்தாா். அவா் இந்தப் பணியை மேற்கொள்ள ரூ. 9 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டாராம்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது பிலால் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், முகமது பிலால் ரசாயனம் தடவிய ரூ. 9 ஆயிரத்தை வணிக ஆய்வாளரிடம் கொடுத்தாா். அப்போது, அவா் மூவாயிரம் ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு மீதிப் பணத்தை அங்கு பணிபுரியும் வயா்மேன் கந்தசாமியிடம் (53) கொடுக்குமாறு கூறினாா்.

இதையடுத்து, அவரிடம் முகமது பிலால் மீதிப் பணத்தைக் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

இதன் பின்னா், அவா்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், இதில் உதவி மின் செயற்பொறியாளா் செல்விக்கும் (38) தொடா்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com