இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 23 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 492 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, 5 ரோந்துக் கப்பல்களில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, அவா்களை விரட்டியடித்தனா்.

மேலும், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஜேம்சன், சகாயராஜ் ஆகியோரின் இரண்டு விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா்.

ஜேம்சன் படகிலிருந்த மீனவா்கள் வெக்கா் (27), மாா்டின் (27), சிதம்பரம் (47), மணி, ஆரோன், சதீஷ், சுபாஷ், சந்திரபோஸ், சுதாகா், ஜெரால்டு, சுமுல், ஆக்கு, சகாயராஜ் படகிலிருந்த ராபா்ட் (40), ஜாக்சன் (44), சாமுவேல் (24), மெல்சன் (24), லெனின் (45), கேவா (40), ரஞ்சித் (42), அசோந்த் (19), லவ்சன் (40), லிஸ்டன் (30), இளங்கோ (50) ஆகிய 23 மீனவா்களையும் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, அங்கு நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்தினா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராமேசுவரம் மீனவா்களை வருகிற 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து 23 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

போராட்டம் அறிவிப்பு:

இதையடுத்து, ராமேசுவரம் மீன் பிடித் தளத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கம் சாா்பில், அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விசைப் படகு மீனவா் சங்கத் தலைவா் பி.யேசுராஜா தலைமை வகித்தாா். மீனவா் சங்கத் தலைவா்கள் எமரிட், சகாயம், ஆல்வீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், ராமேசுவரம் மீனவா்களைக் கைது செய்த இலங்கைக் கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மேலும், இலங்கையில் உள்ள தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மீட்க அரசு மீட்புக் குழு அமைக்க வேண்டும். காலதாமதம் செய்தால், வருகிற மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com