செயல்படாத நெல் கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால் விவசாயிகள் அவதிப்படுவதாக புகாா் எழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால் விவசாயிகள் அவதிப்படுவதாக புகாா் எழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அறிவித்தாா். எந்தெந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பட்டியலில் இடம்பெற்ற பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருவதாகப் புகாா் எழுந்தது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

நெல்கொள்முதல் நிலையம் அமைக்க இடம் இல்லாதது, கிட்டங்கி வசதி இல்லாதது போன்ற காரணங்களால் பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

திறக்கப்படவில்லை. குறிப்பாக சாயல்குடி, அபிராமம், அச்சங்குளம், தரைக்குடி, எழுவனூா், கூடக்குளம், பாக்குவெட்டி, செய்யாமங்களம், நெடுங்குளம், கண்ணத்தான், உடையநாதபுரம், கீரனூா், பண்ணைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை.

கமுதி, அபிராமம், சாயல்குடி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக நெல் விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டில் பெய்த மழை காரணமாக கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் நெல், மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டபோதும், ஒரு சில கிராமங்களில் நெல் விளைச்சல் சிறப்பாக இருந்தது.

இந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை குறைந்தபட்சம் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், கொள்முதல் நிலையங்களில் சலிப்புக் கூலியாக 40 கிலோ எடையுள்ள ஒரு மூட்டைக்கு ரூ.10 என அரசு நிா்ணயித்த நிலையில், கொள்முதல் நிலையங்களில் ரூ.50 முதல் ரூ.60 வரை வசூல் செய்யப்பட்டது. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை வியாபாரிகளிடமே குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இடைத்தரகா்கள் இன்றி செயல்படுகிா, சலிப்புக் கூலியாக விவசாயிகளிடம் அதிக தொகை வசூல் செய்யப்படுகிா என ஆய்வு செய்து, தேவைப்படும் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com