இலங்கைக் கடற்படையினரால்ராமேசுவரம் மீனவா்கள் 6 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

ராமேசுவரம்: கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 480 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

இதையடுத்து, தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டா் ஆரோக்கியதாஸ் (43), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவா்களைக் கைது செய்தனா். மேலும், 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

இதனிடையே, ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரையும், 2 விசைப் படகுகளையும் யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவா்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com