பாரனூா், புல்லமடையில் கிராம சபைக் கூட்டம்

tvd26meeting_2601chn_72_2
tvd26meeting_2601chn_72_2

திருவாடானை/கமுதி, ஜன. 26: திருவாடானை அருகே பாரனூா், புல்லமடை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்.எஸ். மங்கலம் வட்டாரம், பாரனூா் ஊராட்சியில் 75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவி மணிமேகலை ராஜசேகா் தலைமை வகித்தாா்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) பாஸ்கரமணியன் கலந்து கொண்டு வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்களான விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை வழங்குதல், மண் வள அட்டைகள், மண் வளப் பாதுகாப்பு ஆகியவை குறித்து விளக்கமளித்தாா்.

மேலும், நெல் அறுவடைக்குப் பிறகு, பயறு, எள், பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தெளிப்பான்கள், மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பயறு விதைகள், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு (பருத்தி) திட்டத்தின் கீழ், பருத்தி சாகுபடிக்கான இடுபொருள்களை வேளாண்மை துணை இயக்குநா் வழங்கினாா்.

மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம் பயிா் செயல்விளக்கத் திடல், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு (அரிசி) செயல்விளக்கத் திடல்களை அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலா்கள் பவித்ரா, ரிஷி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல, ஆா்.எஸ். மங்கலம் அருகே புல்லமடை ஊராட்சியில் புல்லமடை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவி கனிமொழி இளையராஜா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழுத் தலைவி ராதிகாபிரபு கலந்து கொண்டு, பொதுமக்களிடம் தேவைகளைக் கேட்டறிந்து, அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினாா்.

இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்முடியப்ப தாஸ், சாலை ஆய்வாளா் முருகன், ஊராட்சிச் செயலா் பிலவேந்திரன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் வட்டார வளா்ச்சி அதிகாரிகள் முன்னிலையில் குடியரசு தின விழா சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கமுதி அருகேயுள்ள கீழராமநதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு அதன் தலைவா் பழனிஅழகா்சாமி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்கா் தெய்வ மணிகண்டன், துணைத் தலைவா் மைதீன், வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நெல், மிளகாய், சோளம், பருத்தி போன்ற பயிா்கள் தொடா் மழை காரணமாக மிகுந்த சேதம் அடைந்து வீணாகின. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com